Wednesday, January 23, 2008

ஆன்மா - ஓர் எளிய அலசல்

பகவத்பாதாள் (ஆதி சங்கரர்) ஆத்மாவைப் பற்றிய அறிவை உண்டாக்குவதற்கு மிகவும் தெளிவாக உபதேசம் கொடுத்துள்ளார். குரு சிஷ்யனுக்கு இடையிலான சம்பாஷணை மூலம் உயர்ந்த தத்துவங்களை எளிதாக விளங்கும்படி விவரித்துள்ளார். ஏகஸ்லோகத்தில்:

"கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்
ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே
சக்ஷுஸ்தஸ்ய நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே
கிம் தத்ராஹமதோ பவான் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ"

குரு: "கிம் ஜ்யோதிஸ்தவ" - எந்தப் பிரகாசம் மூலமாக நீ எல்லாப் பொருட்களையும் பார்க்கின்றாய்?

சீடன்: "பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்" - பகலில் சூரிய வெளிச்சமிருக்கின்றது. அதன் மூலமாக எல்லாப் பொருட்களையும் நாம் தெரிந்து கொள்கின்றோம். இரவு ஆகிவிட்டால் விளக்கு, சந்திரன் ஆகிய இவற்றின் உதவியால் நமக்குப் பொருட்களைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது.

குரு: "ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே" - சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் எவ்வாறு அறிந்து கொள்கிறாய்? இவற்றைக் காட்டுவதற்கு எந்த ஒளி இருக்கிறது?

சீடன்: "சக்ஷுஸ்தஸ்ய " - கண் மூலமாக. இவைகளைப் பார்க்க வேறொரு ஒளி தேவையில்லை. சூரியனைப் பார்க்க வேறொரு சூரியனோ, சந்திரனைப் பார்க்க வேறொரு பிரகாசமோ தேவையில்லை. பார்க்கத் தேவையானது கண் ஒன்று தான்.

குரு:"நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே" - கண்களிரண்டும் மூடிக் கொண்டிருந்தாலும், பலவிதமான காட்சிகளும், அறிவுரைகளும் தெரியத்தானே செய்கின்றன? அவை எந்த ஒளியின் மூலமாக ஏற்படுகிறது?

சீடன்: "தீ:" - அப்போது புத்தியின் மூலமாகத்தான் ஞானம் ஏற்படுகிறது.

குரு: சரி! புத்தியின் மூலமாகத்தான் பலவிதமான பொருட்களை அறிந்து கொள்கிறோம் என்று ஒப்புக் கொள்ளலாம். புத்தி இருக்கிறதென்று தெரிகிறதா?
"கிம் தத்ர" - அதை எதன் மூலம் தெரிந்து கொண்டாய்?

சீடன்: "அஹம்" - நானேதான்.

குரு: "அத: பவான் பரமகம் ஜ்யோதி:" - ஆதலால் எல்லாவற்றிற்கும் பரமப்பிரகாசமானவன் நீதான். அதுதான் ஆத்மா. அந்த ஆத்மாவே கண்ணையும் பார்க்கிறது. சூரிய சந்திரர்களையும் பார்க்கிறது. எல்லாவற்றையும் பார்பது அதுவே. மூலப்பிரகாசம் அதுவே. உன்னுடைய சங்கல்பத்தினால் தான் சந்திரன், தீபம், இந்திரியம், புத்தி இவையனைத்தும் பிரகாசிக்க முடிகிறது. உன்னைக் காட்டிலும் உயர்ந்த பிரகாசம் எதுவுமில்லை.

இவ்விதம் பல எளிய ஸ்லோகங்கள் மூலம் ஆத்ம தத்துவத்தை விளக்கியுள்ளார் ஆதி சங்கரர்.