Friday, February 29, 2008

புண்ணிய க்ஷேத்ரங்கள் - கைலாசம்

கைலாச பூமியானது ஒவ்வொரு ஹிந்துவாலும் பெரிதும் போற்றப்படும் புண்ணியஸ்தலம். இது பார்வதி பரமேஸ்வரர்களின் வாசஸ்தலமெனக் கூறப்பட்டுள்ளது. 22028 அடி உயரமுள்ள உச்சியையுடைது. மானஸரோவருக்கு 25 மைல் வடக்கேயுள்ளது. இங்கு தான் நம் நாட்டின் பிரதான நதிகளின் உற்பத்தி ஏற்படுகிறது.
கைலாச, மானஸரோவர் யாத்திரையை லிபு கணவாய் மூலம் செய்வார்கள். டோணக்பூர், பிதோராகட், அஸ்கோட், திசூலா, கார்பியாங் வழியாக யாத்திரை போகவேண்டும். கார்பியாங் தான் நமது நாட்டின் எல்லையிலுள்ள ஊர். அதன் பின் லிபு லெக் வழியாக திபேத் நாடு செல்லவேண்டும். வழியில் தக்லகோட் என்னுமிடத்தில் ஒரு புத்த மடம் இருக்கிறது. மானஸரோவர் அருகில் அடுத்தடுத்து இரு ஏரிகள் இருக்கின்றன. மேற்குப் பகுதியிலுள்ள ஏரிக்கு ராகஷஸதால் என்று பெயர். இங்கு நின்று கொண்டுதான் ராவணன் சிவனை ஆராதித்ததாகக் கூறுவர். தேவியின் 51 பீடங்களில் மானஸரோவர் ஒன்று. இங்கு தான் தேவி தாக்ஷாயணியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது. மானஸரோவரின் தெளிவான ஸ்படிகம் போன்ற நீரை வேரெங்கும் காண்பதறிது.
கைலாசத்தின் தோற்றமே 16 இதழ்கொண்ட தாமரையின் மேல் வைக்கப்பட்ட சிவலிங்கம் போலுள்ளது. செல்லும் வழியிலுள்ள கௌரிகுண்டம் மிகவும் குளிர்ச்சியான ஏரி. இந்த ஜலம் பார்வதி தேவியினால் ஸ்நானம் செய்யப்பெற்று புனிதத்தன்மை பெற்றுள்ளது. கைலாச பர்வதத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாத்ரிகர்களின் கடமை. திபெத்திய புராண நூல்களில் கைலாச பர்வதம் பற்றியும், அங்கு வசிக்கும் சிவ பார்வதி பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஜைனர்கள் அவர்களது முதல் தீர்தங்கரர் இங்குதான் 'நிர்வாணம்' பெற்றதாகக் கூறுவர். கைலாசத்தின் அழகும், வனப்பும் காளிதாஸனால் தான் வர்ணிக்க இயலும். பக்திமான்களும், புண்ணியசாலிகளும் இறந்தபின் இங்கு வசிப்பதாய் ஆஸ்திகர்களின் நம்பிக்கை.

Thursday, February 7, 2008

சாலிக்ராமம் - ஓர் அறிமுகம்

"ஆஜன்மக்ருதம் பாபானாம் ப்ராயச்சித்தம் யயிச்சதி
சாலிக்ராமஷிலாவாஹி பாபஹரி நமோஸ்துதே"

சாலிக்ராமத்தினால் கழுவப்பட்ட தீர்த்தமே - உனக்கு வணக்கம். ஆஜன்ம பரியந்தம் விளைந்த சகல பாபங்களையும் நிவர்த்தித்துக் கொள்ளவிரும்புவோருக்கு நீ சகல பாபங்களையும் போக்குகிறாய் - என்று பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

வைதீகமான ஹிந்து குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாலிக்ராமம். இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிகப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள். தலைமுறை, தலைமுறையாக வழி, வழியயக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனை பெற்று ஆராதித்து வருகிறார்கள் என்பதே இது எவ்வளவு புனிதமானது, மதிப்பிற்குரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை விளக்கும். இது கன்னிகாதானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு.

சாலிக்ராமசிலா என்பது விஷ்ணு அம்சம் உடையது. இதன் மந்திரத்திற்கு ரிஷி ஸ்ரீபகவான். தேவதை நாறாயாணன். சாலிக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைகக்கூடிய ஒருவிதமான கல். பவிஷ்யோத்தர புராணம் கூறுவது - கண்டகி நதிக்கு வடக்கிலும் ஹிமாசலத்திற்கு தெற்கிலும் பத்து யோஜனை விஸ்தீர்ணமுள்ள சாலிக்ராமம் என்ற புண்ணிய பூமியுள்ளது. இங்கு துவாரவதி சாலிக்ராமத்தில் ஒன்று கூடுகிறது. மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தலம் இது என்பதில் சந்தேகமே கிடையாது. முக்திமதி அல்லது முக்திக்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டுவிலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது. இதையே சாலிக்ராம க்ஷேத்ரம் என்றும் கூறுவர்.
சாலிக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:
ப்ரம்மனது வியர்வைத்துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள். அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர். அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்காளாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர். இதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி அவர்களள பரிஹாரம் கிட்டமுடியாமல், விஷ்ணுவை அண்டினார். இரு சாபங்களையும் அகற்ற இயலாது என்று கூறி விஷ்ணு ஒரு உபாயம் கூறினார். சாலிக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ர புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது. அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியனவே சாலிக்ராம கற்கள்.
சாலிக்ராமங்களில் உள்ளும், வெளியும் கூட சங்கு, சக்ர முத்திரைகள் தெரிவதுண்டு. பல வர்ணங்களுடன் கூடிய அரவத்தின் படம் போல் எல்லாப் பக்கங்களிலும் அடையாளம் தெரியும். சாலிக்ராமம் 'லக்ஷ்மிகாந்தம்' என்றும் அழைக்கப் படும். இது ஒரு ஐஸ்வர்யமாகவே கருதப்படுகிறது. விரும்புவதை கொடுக்கவல்லது. இதேபோல் சக்ரக்குறி உள்ளேயுள்ள சாலிக்ராமத்திற்கும் 'லக்ஷ்மிகாந்தம்' என்றே பெயர். இதுவும் இஷ்டப்ரதமாக உள்ளது. ஸ்ரீக்ருஷ்ணருடைய அடையாலங்களைக் கொண்ட சாலிக்ராமங்களும் உண்டு. ஆமை அடையாளமோ, பசுவின் காலை அடையாலமாக உள்ளவற்றை 'வரஹம்' என்று கூறுவர். சிவப்பு நிறமுள்ள கற்களை 'நரஸிம்ஹ' உருவம் என்று பயப்படுவர். சங்கு முத்ரையுடையது 'வாமன' என்று அழைக்கப்பெறும். நடுவில் சக்ரமுத்திரையுடனும், மிகவும் பெரியதாகவும் இருக்கும் கற்கள் 'தாமோதர' என்று பெயர் பெற்றவை. இதில் மஞ்சள் கிரணங்களும் பெரிய துவாரமும் இருக்கும். குடை போன்று உள்ள சாலிக்ராமம் வைத்திருப்பவன், அரசனாவான். உருண்டை வடிவுள்ளது ஒருவனை தன்வான் ஆக்கும். தட்டையான மூக்கு உடையது கஷ்டத்தையும் வேதனையையும் கொடுக்கும். கூரான நுனியுள்ளது சண்டை வளர்க்கும்.
சாலிக்ராமத்தின் நெற்றிப் பாகம் பாம்பின் படம் போலும், தங்க நிற சக்ரமுடையதானால் அது மிகவும் சிறப்பானது. இதற்கு 'வாமதேவ' என்று பெயர். இடது பக்கம் கருப்பாயும், வலது பக்கம் சிவப்பாயும் உள்ளது, அல்லது மூர்த்தி நீண்ட உதடு உடையது, சிவப்பு உதடுகள், சக்ரத்தை தரித்திருப்பது இவை நன்மை பயப்பவை அல்ல.
இவையெல்லாம் சாலிக்ராமசிலையாக உள்ளவைகளுக்கு பொருந்தும் என அறியவும். பத்ரிநாத்திலுள்ள பிம்பங்கள் சாலிக்ராமத்தினால் ஆனவை. ஆதி சங்கரர் சாலிக்ராம ந்ருஸிம்ஹரை ப்ரதிஷ்டை செய்துள்ளார் பத்ரிநாத்தில். சாலிக்ராமத்தை கோர்த்து மாலையாகவும் பிம்பங்களுக்கு அணிவிக்கலாம். சாலிக்ராம உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், அதற்கு ஒரு தோஷமும் இல்லை. அது குற்றமற்றது.
சாலிக்ராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு பூஜா விவரணங்களோ தேவையில்லை. அது இருந்தாலே சந்துஷ்டியை கொடுக்கவல்லது. சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள். அது சிரார்த்த காலங்களில் இருக்க வைப்பது பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
சாலிக்ராம அபிஷேகதீர்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும். இது வைகுண்ட வாசத்தைக் கொடுக்க வல்லது. சாலிக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது.
சாலிக்ராமத்தின் மஹிமை பற்றி சிவபெருமானே பின்வருமாறு கூறுகிறார்:
"எனது லிங்கஸ்வரூபத்தினை கோடிகளில் காண்பதிலும், பூஜிப்பதிலும் உண்டாகும் புண்ணியம், சாலிக்ராமம் ஒன்றைப் பார்த்தாலும், அர்சித்தாலும் ஏற்படும் புண்ணியத்திற்குச் சமம்".

இத்தகைய மஹிமை வாய்ந்த சாலிக்ராமங்களை இல்லம் தோறும் வைத்து, பூஜித்து உலக நன்மையை வேண்டுவோமாக.