Friday, January 25, 2008

குரு - சீடன் - லக்ஷணங்கள்

ஓர் உயர்ந்த குருவானவர் எப்படி இருக்க வேண்டும்; ஒரு சிறந்த சீடனானவன் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்கள் எவை என்பது பற்றி நமது வேதங்களிலும், புராணங்களிலும் எண்ணற்ற விளக்கங்கள் இருக்கின்றன.

குருவின் லக்ஷணங்களைப் பற்றி, வேதாந்த தேசிகர் 'ந்யாச விமசதி:' யில் ஒரு ஸ்லோகத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

"ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமனகம் ச்ரோத்ரியம் ப்ரஹ்ம்நிஷ்டம்
ஸத்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாதுவ்ருத்த்யா ஸமேதம்
தம்பாஸூயாதிமுக்தம் ஜிதவிஷயகணம் தீர்கபந்தும் தயாலும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேசிகம் பூஷ்ணுரீப்ஸேத் "

நல்ல சம்பிரதாயத்தில் சித்தமுடையவரும், திடமான மனதுடையவரும், பாபமற்றவரும், சாஸ்திரங்களை அறிந்தவரும், ப்ரஹ்மத்தில் ஒன்றியவரும், ஸத்வ குனம் அதிகமாகப் பெற்றுள்ளவரும், உண்மை பேசுபவரும், நல்ல ஆசாரத்துடன் இருப்பவரும், டம்பம், பொறாமை போன்றவைகளில்லாதவரும், வெளிப் பொருட்கள் விஷயமான பற்றை வென்றவரும், எப்போதும் உறவினராக விளங்குபவரும், தயையுடையவரும், தவறுகளைத் திருத்துபவரும், தனக்குச் சேர்ந்தவர்களுக்கும், பிறருக்கும் நன்மையை விரும்புபவருமான குருநாதரை வணங்குகிறேன் - என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சீடனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களை "ந்யாச விம்சதி:" பின்வருமாறு கூறுகிறது.

"ஸத்புத்தி: ஸாதுஸேவீ ஸமுசிதசரித: தத்த்வபோதாபிலாக்ஷீ
சுச்ரூஷூ: த்யக்தமான: ப்ரணிபதனபர: ப்ரச்னகாலப்ரதீக்ஷ:
சாந்தோ தாந்தோsனஸூய: சரணமுபகத: சாஸ்த்ரவிச்வாஸசாலீ
சிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் க்ருதவிதபிமதம் தத்த்வத: சிக்ஷணீய: "

நல்ல மனதுள்ளவன், மஹான்களுக்குச் சேவை செய்பவன், சரியான நடத்தை உள்ளவன், தத்துவத்தை அறிய ஆர்வமுள்லவன், குருவின் சேவையையே கருத்தில் கொண்டிருப்பவன், அகந்தையற்றவன், குருவை நமஸ்கரிப்பதற்கு ஆர்வமுடனிருப்பவன், கேள்விகளை வினவத் தக்க தருணத்தை எதிர் நோக்குபவன், மனவடக்கம் பொருந்தியவன், புலனடக்கம் வாய்க்கப் பெற்றவன், பகைமையற்றவன், குருவிடம் சரணமடைந்தவன், சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவன் - தகுந்த பரீக்ஷையில் தேறிய நன்றியுள்ள இத்தகைய சீடனுக்கு விருப்பமாயுள்ளதான தத்துவம் கற்றுத்தரப்பட வேண்டும்.

இன்றைய கால குரு, சிஷ்யர்களுக்கும் இந்த லக்ஷணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதி சங்கரர் மட்டுமே கோவிந்தபகவத் பாதரிடம் சீடனாக இருந்த போது இங்கு கூறப்பெற்ற சகல லக்ஷணங்களையும் பெற்றிருந்தார். அவரே லோக குருவாக உயர்ந்த போது, குருவிற்காக கூறப்பெற்ற அனைத்து லக்ஷணங்களையுமே பெற்றிருந்தார். அவர்தம் தாழ் பணிந்து பாரத புண்ணிய பூமியின் மக்களாகிய நாமனைவரும் நலம் பெறுவோமாக!

Wednesday, January 23, 2008

ஆன்மா - ஓர் எளிய அலசல்

பகவத்பாதாள் (ஆதி சங்கரர்) ஆத்மாவைப் பற்றிய அறிவை உண்டாக்குவதற்கு மிகவும் தெளிவாக உபதேசம் கொடுத்துள்ளார். குரு சிஷ்யனுக்கு இடையிலான சம்பாஷணை மூலம் உயர்ந்த தத்துவங்களை எளிதாக விளங்கும்படி விவரித்துள்ளார். ஏகஸ்லோகத்தில்:

"கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்
ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே
சக்ஷுஸ்தஸ்ய நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே
கிம் தத்ராஹமதோ பவான் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ"

குரு: "கிம் ஜ்யோதிஸ்தவ" - எந்தப் பிரகாசம் மூலமாக நீ எல்லாப் பொருட்களையும் பார்க்கின்றாய்?

சீடன்: "பானுமானஹனி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்" - பகலில் சூரிய வெளிச்சமிருக்கின்றது. அதன் மூலமாக எல்லாப் பொருட்களையும் நாம் தெரிந்து கொள்கின்றோம். இரவு ஆகிவிட்டால் விளக்கு, சந்திரன் ஆகிய இவற்றின் உதவியால் நமக்குப் பொருட்களைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது.

குரு: "ஸ்யாதேவம் ரவிதீபதர்சனவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே" - சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் எவ்வாறு அறிந்து கொள்கிறாய்? இவற்றைக் காட்டுவதற்கு எந்த ஒளி இருக்கிறது?

சீடன்: "சக்ஷுஸ்தஸ்ய " - கண் மூலமாக. இவைகளைப் பார்க்க வேறொரு ஒளி தேவையில்லை. சூரியனைப் பார்க்க வேறொரு சூரியனோ, சந்திரனைப் பார்க்க வேறொரு பிரகாசமோ தேவையில்லை. பார்க்கத் தேவையானது கண் ஒன்று தான்.

குரு:"நிமீலனாதிஸமயே கிம் தீர்தியோ தர்சனே" - கண்களிரண்டும் மூடிக் கொண்டிருந்தாலும், பலவிதமான காட்சிகளும், அறிவுரைகளும் தெரியத்தானே செய்கின்றன? அவை எந்த ஒளியின் மூலமாக ஏற்படுகிறது?

சீடன்: "தீ:" - அப்போது புத்தியின் மூலமாகத்தான் ஞானம் ஏற்படுகிறது.

குரு: சரி! புத்தியின் மூலமாகத்தான் பலவிதமான பொருட்களை அறிந்து கொள்கிறோம் என்று ஒப்புக் கொள்ளலாம். புத்தி இருக்கிறதென்று தெரிகிறதா?
"கிம் தத்ர" - அதை எதன் மூலம் தெரிந்து கொண்டாய்?

சீடன்: "அஹம்" - நானேதான்.

குரு: "அத: பவான் பரமகம் ஜ்யோதி:" - ஆதலால் எல்லாவற்றிற்கும் பரமப்பிரகாசமானவன் நீதான். அதுதான் ஆத்மா. அந்த ஆத்மாவே கண்ணையும் பார்க்கிறது. சூரிய சந்திரர்களையும் பார்க்கிறது. எல்லாவற்றையும் பார்பது அதுவே. மூலப்பிரகாசம் அதுவே. உன்னுடைய சங்கல்பத்தினால் தான் சந்திரன், தீபம், இந்திரியம், புத்தி இவையனைத்தும் பிரகாசிக்க முடிகிறது. உன்னைக் காட்டிலும் உயர்ந்த பிரகாசம் எதுவுமில்லை.

இவ்விதம் பல எளிய ஸ்லோகங்கள் மூலம் ஆத்ம தத்துவத்தை விளக்கியுள்ளார் ஆதி சங்கரர்.

Sunday, January 20, 2008

ருத்ராக்ஷம் - ஓர் அறிமுகம்

எம்மதஸ்தர்களும் ஜபம் செய்வதற்கு ஏதாவது ஒருவகை ஜபமாலையை உபயோகிக்கிறார்கள். ஹிந்துக்கள் ருத்ராக்ஷத்தையோ, துளஸியையோ, ஸ்படிகத்தையோ பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள்.
'ருத்ராக்ஷ' என்ற சொல்லுக்கு ருத்ரனின் கண்ணீர் என்று பொருள்படும். ருத்ராக்ஷம் என்பது அதே பெயர் கொண்ட மரத்தின் காய் தான். இது நேபாள தேச மலைகளிலும், ஜாவா தீவிலும் அதிகமாக காணப்படுகிறது. இதில் போலிகளும் கிடைக்கின்றன. ருத்ராக்ஷம் மிக புனிதத்தன்மை பெற்றது. ருத்ராக்ஷமும், ஸ்படிகமும் சிவ பக்தர்களாலும், துளஸி வைணவர்களாலும் பெரும்பாலும் அணியப்ப்டுகிறது.

பத்ம புராணம் கூறவது:

"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராகஷத்தை தரிப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்".

ருத்ராக்ஷத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:

க்ருத யுகத்தில் த்ருபுரன் என்ற அசுரன் ப்ரம்மாவிடமிருந்து அநேக வரங்களைப் பெற்று, ப்ராம்மணர்களையும், தேவர்களையும் வெகுவாக இம்சித்து வந்தான். ருத்ரனிடம் முனிவர்களும், தேவர்களும் முறையிட அவர் இவ்வசுரனை சம்ஹரித்தார். இந்த சண்டையில் ருத்ரனது வியர்வைத் துளிகள் பூமியில் விழ, அவை ருத்ராக்ஷ மரங்களாக உண்டாயின.

பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும். ருத்ராக்ஷம் அதனுடைய முகங்களைக் கொண்டு பலவகையாக அறியப்படுகிறது.

(1) ஒரு முக ருத்ராக்ஷம் 'சிவ' என்று அறியப் பெறும். இதை அணிவதால் ப்ரம்மஹத்தி தோஷமும் விலகும். மோக்ஷம் விரும்புவோர் இதை அணிய வேண்டும்.
(2) இரு முக ருத்ராக்ஷம் 'தேவ தேவ' என்று அறியப் பெறும். இது 'அர்த்தநாரீஸ்வரனைக்' குறிக்கும். இது சகல பாபங்களையும் போக்க வல்லது. முக்யமாக பசுஹத்தி தோஷத்தை நிவர்த்திக்கும். ஸ்வர்கப் ப்ரதமமானது.
(3) மூன்று முக ருத்ராக்ஷம் 'அனல' என்று அறியப் பெறும். இது அக்னி தேவனைக் குறிக்கும். இது சஞ்சித பாபங்களை (accumulated sins) போக்கி, சர்வ யஞ்ஞ பலன்களைக் கொடுக்கும். இதை அணிபவர் தைரியமிக்கவர்களாயும், சத்ருக்களால் வெல்ல முடியாதவராயும் ஆவர். அதி நுட்பமான புத்தி உண்டாகும். வயற்று உபாதை உண்டாகாது. தீயினால் பாதை ஏற்படாது. அமங்களங்கள் ஏற்படாது. முடிவில் ஸ்வர்கம் அடைவர்.
(4) நான்கு முக ருத்ராக்ஷம் 'ப்ரும்மா' என்று அறியப் பெறும். இதை அணிபவர் வேத விற்பன்னர்களாயும், தர்ம சாஸ்திர நிபுணர்களாயும், தனவந்தர்களாயும் ஆவதோடு, கொலை செய்த பாபங்களும் அகலப் பெறுவர்.
(5) பஞ்ச முக ருத்ராக்ஷம் 'காலாக்னி' என்று அறியப் பெறும். இது பரமசிவனது ஐந்து முகங்களாகிய "சத்யோஜாதம், வாமதேவ, அகோரம், தத்புருஷம், ஈசான:" என்பனவற்றைக் குறிக்கும். இதை அணிபவர் நிஷேத ஆகாரம் செய்த பாபத்திலிருந்து விடுபடுவர், சிவனுக்கு மிகவும் அடியார்களாவர், ஐஸ்வர்யவானாயும், சந்தோஷமுள்ளவனாயும், இம்மையிலும், மறுமையிலும் சகல போகங்களையும் பெற்று, தேவர்களாலும் வணங்கப் பெறுவர். எல்லா விதங்களிலும் பஞ்சமுக ருத்ராக்ஷம் விசேஷமாக கருதப்படுகிறது.
(6) ஆறுமுக ருத்ராக்ஷம் 'கார்திகேய' என்று அறியப் பெறும். இதை வலது கையில் அணிவதால் ப்ரும்மஹத்தியாதி பாபங்கள் நீங்கும். மிக பராக்ரமசாலியாயும், தோல்வியறியாதவனாயும், சகல நற்பண்புள்ளவனாயும், யௌவனமும், அழகும் பெற்றிருப்பான். அன்னை பராசக்தி அருள் கிடைத்து, பெரியதொரு சதஸிலும் வாக்வன்மையோடு பேசும் திறனும் பெறுவான். மறுமையில் ஸ்வர்கம் பெறுவான்.
(7) ஏழு முக ருத்ராக்ஷம் 'அனந்த' என்று அறியப் பெறும். இது மஹா லக்ஷ்மியைக் குறிக்கும். ஸர்ப்ப ராஜனுக்கு பயத்தைக் கொடுக்கும் இதை அணிபவர்களை சகல விஷங்களினின்றும் காப்பாற்றும். ப்ரும்மஹத்தி, குடி, களவு, கற்பின்மை முதலியனவற்றைப் போக்கும். மூவலக சுகங்களும் ப்ராப்திற்க்கும்.
(8) எட்டு முக ருத்ராக்ஷம் 'வினாயக' என்று அறியப் பெறும். இது விநாயகப் பெருமானைக் குறிக்கும். இதை அணிபவர் எப்பிறவியிலும் மேதா விலாசத்தோடு விளங்குவர். வாழ்வில் தோல்வியின்றி, பெரிய எழுத்தாளனாகவும், சைத்ரீகனாகவும், நிர்வாகத்திறமை பெற்றவனாகவும், நீண்ட ஆயுள் வாழ்ந்து ஸ்வர்க்கப் பதவியினைப் பெறுவான்.
(9) ஒன்பது முக ருத்ராக்ஷம் 'பைரவ' என்று அறியப் பெறும். இது துர்கா (சக்தி) தேவியைக் குறிக்கும். இதை கைகளில் அணிபவர் சகல பாபங்களும் கரைக்கப்பெற்று, சிவசாயுஜ்யம் பெறுவர். இந்திரனுக்கு நிகராக வணங்கப் பெறுவர்.
(10) பத்துமுக ருத்ராக்ஷம் 'தச முக' என்று அறியப் பெறும். ருத்ராக்ஷத்தின் சக்தி மஹத்தானது. இது மஹாவிஷ்ணுவினைக் குறிக்கும். இதை கண்ட மாத்திரத்தில் சர்பங்களும் நாசமடையும். இதை அணிபர் மட்டுமின்றி அவரது சந்ததியினரும் இதனால் காக்கப் பெறுவர்.
(11) பதினோரு முக ருத்ராக்ஷத்தை சிரஸில் அணிய வேண்டும். இது அஞ்சனேயனைக் குறிக்கும். ஆயிரம் அஸ்வமேத பலனையும், ச்ரோத்ரியர்களுக்கு ஆயிரம் கோதானம் செய்த பலனையும் கொடுக்கும். மறு பிறவியற்று ஹரனுடன் ஒன்றாய் கலந்துவிடுவர்.
(12) பனிரெண்டு முக ருத்ராக்ஷம் கழுத்தில் அணிய வேண்டியது. சூரிய பகவானுக்கு திருப்தியை உண்டுபண்ணும். பல யாக, யஞ்ஞ பலன்களைக் கொடுப்பதோடு, இடி, மின்னல் முதலிய பயங்கள் ஏற்படாது. அக்னி உபாதையோ, வியாதியோ அணுகாது. ஏழ்மை ஏற்படாது. ப்ராணி வதை பாபங்கள் போகும்.
(13) பதின்மூன்று முக ருத்ராக்ஷம் 'ருத்ர' என்று அறியப் பெறும். இதை அணிபவர் சகல இஷ்டங்களையும் பெறுவர். இது க்ருஹத்திலிருந்தாலே நிதியாக விளங்கும். இது இந்திரனைக் குறிக்கும். செயற்கறிய செய்கை செய்யும் ஆற்றல் ஏற்படும். ஸ்வபந்து ஹத்தி தோஷத்தைப் போக்கி ஸ்வர்கப் ப்ரதமமாய் இருக்கும்.
(14) பதினான்கு முக ருத்ராக்ஷம் 'தேவ மணி' என்று அறியப் பெறும். சிரஸிலோ, கையிலோ அணியலாம். இது சிவ பெருமானைக் குறிக்கிறது. இதை அணிபவர் தேவர்களாலும் பூஜிக்கப் பெறுவர். இது பேய், பிசாசு இன்ன பிற தீய சக்திகளிலிருந்து காக்கும். சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும்.

ருத்ராக்ஷம் அணியும் போது அததற்குண்டான மந்திரங்களைச் சொல்லியே அணியவேண்டும்.

ஒரு முகம் -"ஓம் ருத்ர ஏகவக்த்ரஸ்ய"
இரு முகம் -"ஓம் கம் த்விவக்த்ரஸ்ய"
மூன்று முகம் -"ஓம் வம் த்ரிவக்த்ரஸ்ய""
நான்கு முகம் -" ஓம் ஹ்லீம் சதுர்வக்த்ரஸ்ய"
ஐந்து முகம் -"ஓம் ஹ்லாம் பஞ்சவக்த்ரஸ்ய"
ஆறு முகம் -"ஓம் ஹ்லூம் ஷட்வக்த்ரஸ்ய"
ஏழு முகம் - "ஓம் ஹ்ல: சப்தவக்த்ரஸ்ய"
எட்டு முகம் -"ஓம் கம் அஷ்டவக்த்ரஸ்ய"
ஒன்பது முகம் -"ஓம் ஜூம் நவவக்த்ரஸ்ய"

பத்து முகம் -"ஓம் க்ஷம் தசவக்த்ரஸ்ய"
பதினொரு முகம் -"ஓம் ஸ்ரீம் ஏகாதசவக்த்ரஸ்ய"
பனிரெண்டு முகம் -"ஓம் ஹ்ராம் த்வாதசவக்த்ரஸ்ய"
பதிமூன்று முகம் -"ஓம் க்ஷௌம் த்ரயோதசவக்த்ரஸ்ய"
பதினான்கு முகம் -"ஓம் வாம் சதுர்தசவக்த்ரஸ்ய"


தற்காலத்தில் வேறு சில மந்திரங்களும் உபயோகத்தில் உள்ளன.

ஒரு முகம் -"ஓம் நம: சிவாய ஓம் ஹ்ரீம் நம:"
இரு முகம் -"ஓம் நம: ஓம் சிவ சக்திஹி நம:"
மூன்று முகம் -"ஓம் க்லீம் நம:"
நான்கு முகம் -" ஓம் ஹ்ரீம் நம:"
ஐந்து முகம் -"ஓம் ஹ்ரீம் நம:"
ஆறு முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம:"
ஏழு முகம் - "ஓம் ஹம் நம:"
எட்டு முகம் -"ஓம் ஹம் நம: ஓம் கணேசாய நம:"
ஒன்பது முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம: ஓம் நவதுர்கையை நம:"
பத்து முகம் -"ஓம் ஹ்ரீம் நம: ஓம் ஸ்ரீ நாராயணாய நம:"
பதினொரு முகம் -"ஓம் ஹ்ரீம் ஹம் நம: ஓம் ஸ்ரீருத்ராய நம:"
பனிரெண்டு முகம் -"ஓம் க்ரௌம் ஸ்ரௌம் ரௌம் நம:"
பதிமூன்று முகம் -"ஓம் ஹ்ரீம் நம:"
பதினான்கு முகம் -"ஓம் நம: ஓம் சிவாய நம:"

ருத்ராக்ஷ மாலையில் ஒழுங்கான, குற்றமற்ற ருத்ராக்ஷங்களைக் கோர்க்க வேண்டும். முகங்கள் சரியானபடியும், உடையாமலும், பூச்சி அரிக்காமலும், கோணல் மாணலிலாமலும் இருக்க வேண்டும். மாலையில் 'ப்ரும்மக்ருந்தி' என்று சொல்லப்படும் நடுநாயகமாக ஒரு தொங்கட்டம் இருக்க வேண்டும். ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.

புண்ணிய நதிகள் - ஸரஸ்வதி

புஷ்கரம் என்னும் ஏரியிலிருந்து உற்பத்தியாகி லூனி என்னும் நதியுடன் கலக்கிறது. ஹிமாலயத்தில் சிவாலிக்கில் உற்பத்தியான ஸரஸ்வதி நதி விநாசன என்ற இடத்தில் மறைந்து மீண்டும் புஷ்கரத்தில் உண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது. ஸரஸ்வதி நதிதான் படாபாக்னியை மேற்கு சமுத்திரத்திற்கு தூக்கி சுமந்ததாகச் சொல்லப்படுகிறது.
ரிக்வேதத்தில் இந்த நதி பலவாறு வர்ணிக்கபட்டுள்ளது. ரிக் வேதத்தின் 'நாடிஸ் ஸ்துதி ஸூக்தம்' (6.61,7.95 மற்றும் 7.96) இந்நதியை மேற்கே சட்லஜ் நதிக்கும், கிழக்கில் யமுனை நதிக்கும் நடுவில் அந்தர்வாகினியாகச் செல்கிறதாகக் கூறுகிறது. ரிக்வேதத்தில் ஸரஸ்வதி நதி ஏறக்குறைய 72 இடங்களில் கூறப்படுகிறது. 'ஸப்த சிந்து' என்று அறியப்படும் ரிக்வேத கால ஏழு நதிகளில் ஸரஸ்வதி தலையான நதியாக அறியப் பெற்றுள்ளது. பிற்கால வேதநூல்களாகிய 'தான்ட்யா', 'ஜைமின்னியா' மற்றும் மஹாபாரதம் இந்நதி பாலைவனத்தில் மறைந்ததாகக் கூறுகின்றன. ப்ரயாக் (அஹமதாபாத்) நகரில் ஸரஸ்வதி அந்தர்வாகினியாகிய கங்கை, யமுனையுடன் கலக்கிறது. இது 'த்ரிவேணி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.

Friday, January 11, 2008

புண்ணிய நதிகள் - ப்ரஹ்ம்மபுத்ரா

இதிஹாஸங்களிலும், புராணங்களிலும், பழைய நூல்களிலும் 'ப்ரஹ்ம்மபுத்ரா' நதியை 'லௌஹித்யா' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவும் சோனா நதியினைப் போல் 'நதம்' தான் (ஆண்பால்). அஸ்ஸாம் ராஜ்ஜியத்தின் கண் பாயும் இந்நதியை அஸ்ஸாமிய பாஷையில் லோஹித் என்றும் கூறுவர்.

திபெத்தின் மேற்கு பகுதியான மானஸரோவர் ஏரியில் உற்பத்தியாகிறது. சந்தனு என்ற ஒரு ரிஷிக்கு அமோகா என்கிறவள் பத்தினி - ப்ரம்மனது அருளால் ஒரு மகவைப் பெற்றாள். சந்தனு இக்குழந்தையை கைலாசம், கந்தமாதனம், ஜருதி, சம்பகம் என்னும் மலைகளுக்கு நடுவில் வைத்தார். இக்குழந்தை ஒரு ஜல மயமான உருவைப் பெற்றது. பரசுராமர் தனது தாயாரை கொன்ற பாபம் நீங்க இங்கு வந்து தனது கோடரியால் இந்த ப்ரம்ம குண்டத்தை வெட்டி அதனின்று ப்ரஹ்ம்மபுத்ரா நதியாகப் பாயும்படிச் செய்தார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் ஒன்று சேர்ந்து வரும் நதியில் ப்ரஹ்ம்மபுத்ராவும் கலக்கிறது. இது மிகவும் பாவமான தீர்த்தம். ப்ரஹ்ம்மபுத்ரர நதிக்கரையில் நீலாசல குன்றில் காமக்யா தேவியின் ப்ரசித்தி பெற்ற ஆலயம் கௌஹாத்தி நகருக்கு இரண்டு மைல் தூரத்திலுள்ளது. இது ஒரு முக்கியமான சக்தி பீடம். தாக்ஷாயணியாகிய பார்வதி மாதாவின் தேகத்திலிருந்து யோனி இவ்விடம் விழுந்ததால், இது புண்ணிய பூமியாகி, இங்கு பிறவி, மறுபிறவியிலிருந்து விலக்கக் கூடிய சக்தியைப் பெற்றதாக யோகினி தந்த்ரம் கூறுகிறது.

பஸ்மகூடம் (மன்மதனை சிவபெருமான் எரித்த் இடம்), ஊர்வஸி கூடம் (ஊர்வஸி காமக்யாதேவிக்கு ஸ்வர்கத்திலிருந்து அம்ருதம் கொண்டுவந்த இடம்) இங்கு அமையப் பெற்றுள்ளது. இங்கு மாக மாதம், சுக்ல பக்ஷ த்வவதசியில் ஸ்நானம் செய்வதால் அஸ்வமேத யாக பலன் உண்டாகும். மணிகர்ணிகேஸ்வரர் ஆலயம், அச்வக்ராந்தம் (க்ருஷ்ண பரமாத்மா நரகாசுர வதத்தின் போது தன் பரிவாரங்களுடன் தங்கிய இடம்), இவை ப்ரஹ்ம்மபுத்ரர நதியின் கரையில் அமைந்த புண்ணிய க்ஷேத்ரங்கள். அஸ்வக்ராந்தத்திற்கு தெற்கேயுள்ள அஸ்வி தீர்த்தம், விஷ்ணுவினுடைய கல்கி அவதார க்ஷேத்ரம் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 9, 2008

புண்ணிய நதிகள் - சோனா நதி

வட இந்தியாவில் அமரகண்டகம் என்கிறபடி பூமியில் உற்பத்தியாகும் சோனா நதி கங்கை நதிக்கு ஒரு முக்கிய உபநதி. இங்கேயே தான் நர்மதா நதியும் உற்பத்தியாகிறது. அமரகண்டகம் ஒரு புண்யஸ்தலம். ச்ரார்தம் செய்ய வேண்டிய இடமும் கூட. சோனா நதி பாட்னா அருகே கங்கையை சேருகிறது. சரயு நதியும், சோனா நதியும் எதிரெதிராக கங்கையில் கலக்கின்றன. இந்த நதியை சோணபத்ரா என்றும் கூறுவர். இது நதம் (masculine gender) என்றும் கூறப்படுகிறது. இக்கரையில் சந்தியா உபாஸனை செய்தல் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் போக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. பிரம்மனது இரு கண்ணீர் துளிகள் நர்மதையாகவும், சோனா நதியாகவும் அமரகண்ட மலையிலிருந்து உற்பத்தியாயின என்பது கூறப்பட்டுள்ளது.

ராம, லக்ஷ்மணர்களை விஸ்வாமித்ர முனிவர் இந்த நதியை கடந்ததாய் ராமாயணம் கூறும். புண்ணிய நதியான சோனா நதியின் இன்னோரு பெயர் 'சுமகதி'. இந்த காரணத்தால் இந்நதி பாயும் இப்பிரதேசம் 'மகதம்' என்றும் அறியப் பெறும். பிற்கால பிரபல மகத சாம்ராஜ்ஜியம் இந்நதியினைச் சுற்றியே ஸ்தாபிக்கப் பெற்றது. இந்நதி கிழக்கிலிருந்து, மேற்காக இங்கிருக்கும் மலைகளுக்கு ஒரு மல்லிகை மாலையைப் சூட்டியது போல ஓடுகிறது.

Saturday, January 5, 2008

புண்ணிய நதிகள் - துங்கபத்ரா

'துங்கா' மற்றும் 'பத்ரா' என்ற இரு நதிகளின் சேர்கையால் துங்கபத்ரா என்ற நதி உருவாகியுள்ளது. இது ஆந்திர மாநிலத்தின் ஜீவ நதியாகிய கிருஷ்ணா நதியின் மிக முக்கியமான உப நதி. மைசூர் ராஜ்ஜியத்தில், ஷிமோகா எனும் நகருக்கு ஒன்பது மைல்களுக்கு அப்பால் கூடலி எனும் ஊரில் இவ்விரு நதிகளும் ஒன்றிணைகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையில், 'கங்க மூலா' எனுமிடத்தில் உற்பத்தியாகிறது. புராணங்களின் படி இந்த மலைக்கு 'வராஹ பர்வதம்' என்று பெயர். மஹா விஷ்ணு வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை சம்ஹாரத்த போது, ஸ்வாமியின் இடக் கொம்பிலிருந்து வடிந்த வியர்வை துங்கா நதியாகவும் (துங்கா என்றால் கொம்பு - உயர்ந்த கொம்பு என்பது பொருள்), பலமாயும், உறுதியாயுமிருந்த வலது கொம்பிலிருந்து (பத்ர) வடிந்த வியர்வை பத்ரா நதியாகவும் புனித நதிகளாயின என்பது பெரியோர் வாக்கு.

ஆதி சங்கர பகவத் பாதாளால் ஸ்தாபிக்கப் பெற்ற ச்ருங்கேரி சாரதா பீடம் துங்கபத்ரா நதியின் இடக்கரையில் அமைந்துள்ளது. இயல்பான விரோதிகளான கர்பமாயிருந்த தவளை ஒன்றிற்கு நாகம் குடைபிடித்த அதிசயம் நடந்த இந்த புண்ணிய பூமியை ஆதி சங்கரர் ஸ்வீகரித்ததில் ஆச்சரியமென்ன?

விஜயநகர, ஹம்பி சாம்ராஜ்ஜியம் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றளவும், இயற்கை எழில், புராதானச் சின்னங்கள், தெய்விகம் என அனைத்து குணங்களையும் ஒருங்கே அமையப் பெற்ற துங்கபத்ரா ஜீவநதியாகவே திகழ்கிறது.

ஸ்ரீ மஹாகணபதி ஸஹாயம்

"கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தவம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந ச் ச் ருண்வன்னூதி பிஸ்ஸீத ஸாதனம்"

"அனைத்து மந்திரங்களின் தலைவா! அனைத்து தேவதைகளின் கூட்டமைப்பாகிய கணங்களின் தலைவா! ஞானமே வடிவமான உன்னைப் பாடி வணங்குகின்றேன். இதோ எனக்கு முன்பாக நான் அமைத்து வைத்துள்ள உங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு நான் ஆற்றுகின்ற இந்த உபாஸனையைத் தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்."

இந்த பாரத கண்டத்தில் ஜனிப்பவன் பாக்கியசாலி. பரந்து கிடக்கும் இப் புண்ணிய பூமியில் பிறக்க தேவர்களும் தவமிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இது கர்ம பூமியாகவும் திகழ்கிறது. பல நற்செயல்களைப் புரிவதன் மூலம் ஆத்ம சுத்தியும், சித்த சுத்தியும் ஏற்பட்டு, பரமார்த்திக பேரறிவைப் பெற்று மானிடர் பிறப்பு, இறப்பு இல்லா முக்தி நிலையை அடைய இப் புண்ணிய பூமியின்கண் பற்பல புனித க்ஷேத்திரங்களும், பாவனமான தீர்த்தங்களும் நிறைந்துள்ளன. நமது வைதிக மார்க்கத்தில் (ஹிந்து மதம் என்று நவீனர்களால் கூறப்படுகிறது), க்ஷேத்ராடன மஹிமையும், புண்யதீர்த்த ஸ்நான விசேஷங்களும் மிகவும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன.

ஒரு மனிதனின் மனதிலும், அவனுடைய எண்ணங்களிலும், செய்கைகளிலும் அவன் இருக்கும் சூழ்நிலை ஒரு பக்குவத்தை உண்டு பண்ணுகிறது. அவன் வசிக்கும் இடத்தைப் பொருத்து ஒரு மனிதனுடைய செய்கைகள் உருவாகின்றன. ஆகவே இடங்களுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்படுகிறது. புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்கும் ஸ்தலங்கள் யாது காரணத்தாலோ புனிதத் தன்மை பெற்று இருக்கின்றன. அந்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்வதால் அங்கு இருக்கும் புனிதத் தன்மையை நாம் பெறவும் முடிகிறது.

நமது தேசத்திலுள்ள ஒவ்வொரு புண்ணிய ஸ்தலமும் எப்படி புனிதத்துவம் வாய்க்கப் பெற்றது என்பதை அந்தந்த ஸ்தல புராணங்கள் விளக்கும். பொதுவாக தெயவ அவதார விசேஷத்தாலும், தபோநிஷ்டர்களான மஹரிஷிகள் வசித்து வந்ததாலும், ஸமய குருமார்கள், ஆண்டவனின் அடியார்களாகிய பக்தர்கள் பாதம் பட்டமையாலும், அவர்களால் பாடப்பெற்று போற்றப்படுவதாலும் அந்தந்த ஸ்தலங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதே போல் தீர்த்தங்களும் புனிதமானவையாக விளங்குகின்றன. ஜலம் ஸர்வ தேவ வடிவமானது, ப்ராண மயமானது, அருமருந்தானது என வேத வாக்யங்கள் உத்கோஷிக்கின்றன. இந்த ப்ரபஞ்சமே 'ஆப:' எனப்படும் நீர் மூலமாகவே தோன்றியது. நமது வாழ்விற்கு ஜீவாதாரமாக அமைந்திருப்பது தீர்த்தம் தான். அதிலும் புண்ணிய தீர்த்தங்கள் என தேவ, ரிஷிக்கள் மூலமாய் தோன்றியும், புனிதத் தன்மையை அடைந்தனவையாகுமான நதிகளில் தீர்தாடனம் செய்வதும் நம் பாபம் விலக நம் தர்ம சாஸ்திர நூல்களால் விதிக்கப் பட்டிருக்கின்றன.

அத்தகைய க்ஷேத்ரங்களை தரிசித்து, அங்கு எழுந்தருளியுள்ள மூர்த்திகளை ஆராதித்தும், புனித நீராடுதலையும் ஸனாதன தர்மம் வாழும் ஒவ்வொருவரும், தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் செய்து முடிக்க ஆசை கொள்வான். இத்தகைய புண்ய காரியங்களில் ஈடுபடவும், நிறைவேற்றவும் ஜன்மாந்தர புண்ணிய வசத்தால் தான் முடியும் என்பது சான்றோர் வாக்கு. அந்த பாக்கியம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க பரமனைப் ப்ரார்த்திப்போம்.