Friday, January 11, 2008

புண்ணிய நதிகள் - ப்ரஹ்ம்மபுத்ரா

இதிஹாஸங்களிலும், புராணங்களிலும், பழைய நூல்களிலும் 'ப்ரஹ்ம்மபுத்ரா' நதியை 'லௌஹித்யா' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவும் சோனா நதியினைப் போல் 'நதம்' தான் (ஆண்பால்). அஸ்ஸாம் ராஜ்ஜியத்தின் கண் பாயும் இந்நதியை அஸ்ஸாமிய பாஷையில் லோஹித் என்றும் கூறுவர்.

திபெத்தின் மேற்கு பகுதியான மானஸரோவர் ஏரியில் உற்பத்தியாகிறது. சந்தனு என்ற ஒரு ரிஷிக்கு அமோகா என்கிறவள் பத்தினி - ப்ரம்மனது அருளால் ஒரு மகவைப் பெற்றாள். சந்தனு இக்குழந்தையை கைலாசம், கந்தமாதனம், ஜருதி, சம்பகம் என்னும் மலைகளுக்கு நடுவில் வைத்தார். இக்குழந்தை ஒரு ஜல மயமான உருவைப் பெற்றது. பரசுராமர் தனது தாயாரை கொன்ற பாபம் நீங்க இங்கு வந்து தனது கோடரியால் இந்த ப்ரம்ம குண்டத்தை வெட்டி அதனின்று ப்ரஹ்ம்மபுத்ரா நதியாகப் பாயும்படிச் செய்தார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் ஒன்று சேர்ந்து வரும் நதியில் ப்ரஹ்ம்மபுத்ராவும் கலக்கிறது. இது மிகவும் பாவமான தீர்த்தம். ப்ரஹ்ம்மபுத்ரர நதிக்கரையில் நீலாசல குன்றில் காமக்யா தேவியின் ப்ரசித்தி பெற்ற ஆலயம் கௌஹாத்தி நகருக்கு இரண்டு மைல் தூரத்திலுள்ளது. இது ஒரு முக்கியமான சக்தி பீடம். தாக்ஷாயணியாகிய பார்வதி மாதாவின் தேகத்திலிருந்து யோனி இவ்விடம் விழுந்ததால், இது புண்ணிய பூமியாகி, இங்கு பிறவி, மறுபிறவியிலிருந்து விலக்கக் கூடிய சக்தியைப் பெற்றதாக யோகினி தந்த்ரம் கூறுகிறது.

பஸ்மகூடம் (மன்மதனை சிவபெருமான் எரித்த் இடம்), ஊர்வஸி கூடம் (ஊர்வஸி காமக்யாதேவிக்கு ஸ்வர்கத்திலிருந்து அம்ருதம் கொண்டுவந்த இடம்) இங்கு அமையப் பெற்றுள்ளது. இங்கு மாக மாதம், சுக்ல பக்ஷ த்வவதசியில் ஸ்நானம் செய்வதால் அஸ்வமேத யாக பலன் உண்டாகும். மணிகர்ணிகேஸ்வரர் ஆலயம், அச்வக்ராந்தம் (க்ருஷ்ண பரமாத்மா நரகாசுர வதத்தின் போது தன் பரிவாரங்களுடன் தங்கிய இடம்), இவை ப்ரஹ்ம்மபுத்ரர நதியின் கரையில் அமைந்த புண்ணிய க்ஷேத்ரங்கள். அஸ்வக்ராந்தத்திற்கு தெற்கேயுள்ள அஸ்வி தீர்த்தம், விஷ்ணுவினுடைய கல்கி அவதார க்ஷேத்ரம் என்று கூறப்பட்டுள்ளது.