Saturday, January 5, 2008

ஸ்ரீ மஹாகணபதி ஸஹாயம்

"கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தவம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந ச் ச் ருண்வன்னூதி பிஸ்ஸீத ஸாதனம்"

"அனைத்து மந்திரங்களின் தலைவா! அனைத்து தேவதைகளின் கூட்டமைப்பாகிய கணங்களின் தலைவா! ஞானமே வடிவமான உன்னைப் பாடி வணங்குகின்றேன். இதோ எனக்கு முன்பாக நான் அமைத்து வைத்துள்ள உங்கள் இருக்கையில் அமர்ந்துகொண்டு நான் ஆற்றுகின்ற இந்த உபாஸனையைத் தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்."

இந்த பாரத கண்டத்தில் ஜனிப்பவன் பாக்கியசாலி. பரந்து கிடக்கும் இப் புண்ணிய பூமியில் பிறக்க தேவர்களும் தவமிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இது கர்ம பூமியாகவும் திகழ்கிறது. பல நற்செயல்களைப் புரிவதன் மூலம் ஆத்ம சுத்தியும், சித்த சுத்தியும் ஏற்பட்டு, பரமார்த்திக பேரறிவைப் பெற்று மானிடர் பிறப்பு, இறப்பு இல்லா முக்தி நிலையை அடைய இப் புண்ணிய பூமியின்கண் பற்பல புனித க்ஷேத்திரங்களும், பாவனமான தீர்த்தங்களும் நிறைந்துள்ளன. நமது வைதிக மார்க்கத்தில் (ஹிந்து மதம் என்று நவீனர்களால் கூறப்படுகிறது), க்ஷேத்ராடன மஹிமையும், புண்யதீர்த்த ஸ்நான விசேஷங்களும் மிகவும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன.

ஒரு மனிதனின் மனதிலும், அவனுடைய எண்ணங்களிலும், செய்கைகளிலும் அவன் இருக்கும் சூழ்நிலை ஒரு பக்குவத்தை உண்டு பண்ணுகிறது. அவன் வசிக்கும் இடத்தைப் பொருத்து ஒரு மனிதனுடைய செய்கைகள் உருவாகின்றன. ஆகவே இடங்களுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்படுகிறது. புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்கும் ஸ்தலங்கள் யாது காரணத்தாலோ புனிதத் தன்மை பெற்று இருக்கின்றன. அந்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்வதால் அங்கு இருக்கும் புனிதத் தன்மையை நாம் பெறவும் முடிகிறது.

நமது தேசத்திலுள்ள ஒவ்வொரு புண்ணிய ஸ்தலமும் எப்படி புனிதத்துவம் வாய்க்கப் பெற்றது என்பதை அந்தந்த ஸ்தல புராணங்கள் விளக்கும். பொதுவாக தெயவ அவதார விசேஷத்தாலும், தபோநிஷ்டர்களான மஹரிஷிகள் வசித்து வந்ததாலும், ஸமய குருமார்கள், ஆண்டவனின் அடியார்களாகிய பக்தர்கள் பாதம் பட்டமையாலும், அவர்களால் பாடப்பெற்று போற்றப்படுவதாலும் அந்தந்த ஸ்தலங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதே போல் தீர்த்தங்களும் புனிதமானவையாக விளங்குகின்றன. ஜலம் ஸர்வ தேவ வடிவமானது, ப்ராண மயமானது, அருமருந்தானது என வேத வாக்யங்கள் உத்கோஷிக்கின்றன. இந்த ப்ரபஞ்சமே 'ஆப:' எனப்படும் நீர் மூலமாகவே தோன்றியது. நமது வாழ்விற்கு ஜீவாதாரமாக அமைந்திருப்பது தீர்த்தம் தான். அதிலும் புண்ணிய தீர்த்தங்கள் என தேவ, ரிஷிக்கள் மூலமாய் தோன்றியும், புனிதத் தன்மையை அடைந்தனவையாகுமான நதிகளில் தீர்தாடனம் செய்வதும் நம் பாபம் விலக நம் தர்ம சாஸ்திர நூல்களால் விதிக்கப் பட்டிருக்கின்றன.

அத்தகைய க்ஷேத்ரங்களை தரிசித்து, அங்கு எழுந்தருளியுள்ள மூர்த்திகளை ஆராதித்தும், புனித நீராடுதலையும் ஸனாதன தர்மம் வாழும் ஒவ்வொருவரும், தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் செய்து முடிக்க ஆசை கொள்வான். இத்தகைய புண்ய காரியங்களில் ஈடுபடவும், நிறைவேற்றவும் ஜன்மாந்தர புண்ணிய வசத்தால் தான் முடியும் என்பது சான்றோர் வாக்கு. அந்த பாக்கியம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க பரமனைப் ப்ரார்த்திப்போம்.

No comments: