Saturday, January 5, 2008

புண்ணிய நதிகள் - துங்கபத்ரா

'துங்கா' மற்றும் 'பத்ரா' என்ற இரு நதிகளின் சேர்கையால் துங்கபத்ரா என்ற நதி உருவாகியுள்ளது. இது ஆந்திர மாநிலத்தின் ஜீவ நதியாகிய கிருஷ்ணா நதியின் மிக முக்கியமான உப நதி. மைசூர் ராஜ்ஜியத்தில், ஷிமோகா எனும் நகருக்கு ஒன்பது மைல்களுக்கு அப்பால் கூடலி எனும் ஊரில் இவ்விரு நதிகளும் ஒன்றிணைகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையில், 'கங்க மூலா' எனுமிடத்தில் உற்பத்தியாகிறது. புராணங்களின் படி இந்த மலைக்கு 'வராஹ பர்வதம்' என்று பெயர். மஹா விஷ்ணு வராஹ அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷணை சம்ஹாரத்த போது, ஸ்வாமியின் இடக் கொம்பிலிருந்து வடிந்த வியர்வை துங்கா நதியாகவும் (துங்கா என்றால் கொம்பு - உயர்ந்த கொம்பு என்பது பொருள்), பலமாயும், உறுதியாயுமிருந்த வலது கொம்பிலிருந்து (பத்ர) வடிந்த வியர்வை பத்ரா நதியாகவும் புனித நதிகளாயின என்பது பெரியோர் வாக்கு.

ஆதி சங்கர பகவத் பாதாளால் ஸ்தாபிக்கப் பெற்ற ச்ருங்கேரி சாரதா பீடம் துங்கபத்ரா நதியின் இடக்கரையில் அமைந்துள்ளது. இயல்பான விரோதிகளான கர்பமாயிருந்த தவளை ஒன்றிற்கு நாகம் குடைபிடித்த அதிசயம் நடந்த இந்த புண்ணிய பூமியை ஆதி சங்கரர் ஸ்வீகரித்ததில் ஆச்சரியமென்ன?

விஜயநகர, ஹம்பி சாம்ராஜ்ஜியம் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இன்றளவும், இயற்கை எழில், புராதானச் சின்னங்கள், தெய்விகம் என அனைத்து குணங்களையும் ஒருங்கே அமையப் பெற்ற துங்கபத்ரா ஜீவநதியாகவே திகழ்கிறது.

No comments: