Friday, March 7, 2008

ஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு? (பகுதி 1)

ஹிந்து மதம் பல இதிகாசங்களையும், தேவ தேவியர் பற்றிய புராணங்களையும், பல வழிபாட்டு முறைகளையும், பண்டிகைகளையும் கொண்ட ஒரு விந்தையான கலவை. பெரும்பாலான ஹிந்துக்கள் இத்தகைய தொகுப்பினால் குழப்பமடைந்துள்ளனர். ஹிந்துயிஸம் என்றரியப் படுகின்ற ஸனாதன தர்மத்தின் அடிப்ப்டையான வேதங்கள் - உண்மையான இறைபொருள் ஒன்றே, ஒன்று மட்டுமே என்று அறுதியிட்டு உரைத்துள்ளன. பிறகு ஏன் ஹிந்துக்கள் பல தெய்வங்களையும், பல வழிபாட்டு முறைகளையும் (இவை சில சமயங்களில் ஒன்றிற்கொன்று விரோதமாயுமுள்ளன) பின்பற்றுகின்றனர்? ஏன் இத்தனை தெய்வங்கள்? ஏன் இத்தனை பிளவுகள்? ஏன் ஹிந்து மதம், பிற ஆபிரகாமிய மதங்களைப் போல் ஒரு தெய்வம், ஒரு வழிபாட்டு முறை என்று வரையறுக்கவில்லை? இத்தகைய கேள்விகள் சாதாரண ஜனங்களையும், அறிஞர்களையும் பல்லாண்டுகளாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனை சிறிதளவாவது புரிந்து கொள்ள முயற்சித்தால் பல உண்மைகளை நாம் அறிய முடியும். இதற்கு தேவை சார்பற்ற ஒரு தூய மனநிலை மட்டுமே.

அடிப்படையான ஒரு விஷயம் - "ஹிந்துக்கள் பல தெய்வங்களை வழிபடுவதில்லை. ஒரே தெய்வத்தின் சக்திகளின் மற்றும் செயல்பாடுகளின் உருவகங்களையே வழிபடுகின்றனர்". ஸனாதன தர்மக் கோட்பாடுகளின் படி, ஒரே ஒரு தெய்வம் மட்டுமே உள்ளது - அது ஆத்மா, ப்ரம்மம் என்று அறியப்படுகிறது.

மனித மனத்தின் பன்முகத்தன்மை அளவிடயிலாதது. ஸனாதன தர்மம் மட்டுமே இத்தகைய பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்ப்ட்டது. ஒவ்வொரு மனிதனும், மனித மனமும் தனித்தன்மையுடையது. பல நோய்களுடையது. எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து தீர்வாகாது. ஹிந்து மதம் ஒரு பெரிய மருத்துவமனை போன்றது. ஒவ்வொரு நோய் பிரிவிற்கும் தகுதியான மருத்துவர்களும், உபகரணங்களும் உள்ளது போல வெவ்வேறு மனத் தகுதியுடையோருக்காக பல தெய்வஸ்வரூபங்களும், வழிபாட்டு முறைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன.

மனித மனங்கள் 'வாஸனை' என்றரியப்படும் ஆசைகளால் கட்டப்பட்டுள்ளன. மனதில் ஆசைகள் இருக்கும் வரை, எண்ணங்கள் தறிகெட்டு அலைவதைக் கட்டுப்படுத்த இயலாது. ஆசைகள் நிறைவேறாத போது, மனம் கொந்தழிக்கும், ஆத்திரப்படும். இத்தகைய மனதினை ஒருமுகப் படுத்த இயலாது. இது தன்னை அறிந்து கொள்ளல் என்னும் உயர்ந்த பாதைக்குப் போகும் வழியன்று. தர்மம் (மதம்) எனப் படுவது, ஒரு மனிதனின் உலகப் பொருட்களின் மோகத்திலிருந்து திசைதிருப்பி, உள்திரும்பி தன்னை உணர தகுதியுள்ளவனாக ஆக்க வேண்டி உருவாக்கப்பெற்றவை. ஆனால் உலகப் பொருட்களின் ஈர்ப்புத்தன்மைகளை வெல்லுதல் அனைவருக்கும் சாதாரணமாகக் கைவரப்பெறுவதில்லை. இங்கே தான் ஸனாதன தர்மத்தை வரையறுத்த நம் முன்னோர்களின் அறிவுப்ரகாசம் தெரிகிறது. ஒவ்வொரு மனித ஆசைகளுக்கும், ஒவ்வொரு தெய்வத் தன்மையை வடிவமைத்தனர். அதற்கான வழிபாட்டுமுறைகளையும் உண்டாக்கினர். இதன் மூலம், மனிதன் புலன்களால் ஆளப்பட்டு செய்கின்ற செயல்களிலும் தெய்வத்தன்மையைப் புகுத்தினர். இதன் மூலம், மனிதன் உலகப் பொருட்களின் ஆளுமையில், ஆசைகளில் செய்கைகள் செய்தாலும், தன்னை மிஞ்சிய இறைபொருளை மறக்காதிருக்க செய்யப்பட்டான்.

எடுத்துக்காட்டாக, செல்வத்திற்கான தெய்வமாக 'லக்ஷ்மி' தேவி உருவகப்படுத்தப்பட்டாள். இதன் பலனாக, செல்வத்தின் பின்னால் அலையும் மனித மனம், லக்ஷ்மிதேவியின் வடிவில் தெய்வசிந்தனைக்கு உள்ளானது. உலகக் கல்வியின் பின்னால் அலைபவனின் மனம் 'சரஸ்வதி' தேவியினைத் துதிக்கப் பணிக்கப்பெற்றது. வீரத்திற்காக பார்வதியின் அம்சமான காளி முதலான தேவியர் உருவகப்படுத்தப் பெற்றனர். இதன் மூலம், மனிதன் உலக இன்பங்களைத் தேடி ஓடினாலும், அவனை அறியாமலேயே தெய்வ சிந்தனையும் அவனுடைய காரண, காரியங்களில் உட்படுத்தப்பட்டது. இந்த ஒரு காரணத்தினாலேயே இத்தனை தெய்வங்கள், வழிபாட்டு முறைகள்.

ஸனாதன தர்மம், மனித மனங்களின் தனித்துவத்தை மதிக்கிறது. உலகத்தின் முதல் மனித உரிமை கழகம் ஸனாதன தர்மம் எனலாம்.
ஸனாதன் தர்மம், தன்னை அறியாமலேயே ஒரு மனிதனை தன்னை உணரும் உன்னத பாதையில் திருப்புகிறது. ஒரு சமுதாயக் கட்டமைப்பை உருவாக்குகிறது. உலகத்தின் முதல் சட்டமும் இதுவே.

இத்தகைய கட்டமைப்பு தான் ஸனாதன தர்மத்தின் உயிர்நாடி. எத்தனையோ ஆண்டுகளாக நாம் பிறமதத்தினராலும், நாத்திகராலும் ஆளப்பட்டு, நசுக்கப்பட்டும் ஹிந்து மதம் இன்றும் தழைத்தோங்குவதற்க்கு காரணம். நம் வாழ்வியல், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யவேண்டிய சடங்குகள் மூலம் இறைச் சிந்தனை நம்முள் விதைக்கப்படுகிறது.

-- தொடரும்--