Friday, February 29, 2008

புண்ணிய க்ஷேத்ரங்கள் - கைலாசம்

கைலாச பூமியானது ஒவ்வொரு ஹிந்துவாலும் பெரிதும் போற்றப்படும் புண்ணியஸ்தலம். இது பார்வதி பரமேஸ்வரர்களின் வாசஸ்தலமெனக் கூறப்பட்டுள்ளது. 22028 அடி உயரமுள்ள உச்சியையுடைது. மானஸரோவருக்கு 25 மைல் வடக்கேயுள்ளது. இங்கு தான் நம் நாட்டின் பிரதான நதிகளின் உற்பத்தி ஏற்படுகிறது.
கைலாச, மானஸரோவர் யாத்திரையை லிபு கணவாய் மூலம் செய்வார்கள். டோணக்பூர், பிதோராகட், அஸ்கோட், திசூலா, கார்பியாங் வழியாக யாத்திரை போகவேண்டும். கார்பியாங் தான் நமது நாட்டின் எல்லையிலுள்ள ஊர். அதன் பின் லிபு லெக் வழியாக திபேத் நாடு செல்லவேண்டும். வழியில் தக்லகோட் என்னுமிடத்தில் ஒரு புத்த மடம் இருக்கிறது. மானஸரோவர் அருகில் அடுத்தடுத்து இரு ஏரிகள் இருக்கின்றன. மேற்குப் பகுதியிலுள்ள ஏரிக்கு ராகஷஸதால் என்று பெயர். இங்கு நின்று கொண்டுதான் ராவணன் சிவனை ஆராதித்ததாகக் கூறுவர். தேவியின் 51 பீடங்களில் மானஸரோவர் ஒன்று. இங்கு தான் தேவி தாக்ஷாயணியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது. மானஸரோவரின் தெளிவான ஸ்படிகம் போன்ற நீரை வேரெங்கும் காண்பதறிது.
கைலாசத்தின் தோற்றமே 16 இதழ்கொண்ட தாமரையின் மேல் வைக்கப்பட்ட சிவலிங்கம் போலுள்ளது. செல்லும் வழியிலுள்ள கௌரிகுண்டம் மிகவும் குளிர்ச்சியான ஏரி. இந்த ஜலம் பார்வதி தேவியினால் ஸ்நானம் செய்யப்பெற்று புனிதத்தன்மை பெற்றுள்ளது. கைலாச பர்வதத்தை ப்ரதக்ஷிணம் செய்வது யாத்ரிகர்களின் கடமை. திபெத்திய புராண நூல்களில் கைலாச பர்வதம் பற்றியும், அங்கு வசிக்கும் சிவ பார்வதி பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஜைனர்கள் அவர்களது முதல் தீர்தங்கரர் இங்குதான் 'நிர்வாணம்' பெற்றதாகக் கூறுவர். கைலாசத்தின் அழகும், வனப்பும் காளிதாஸனால் தான் வர்ணிக்க இயலும். பக்திமான்களும், புண்ணியசாலிகளும் இறந்தபின் இங்கு வசிப்பதாய் ஆஸ்திகர்களின் நம்பிக்கை.