Friday, March 7, 2008

ஹிந்து மதம் - பல தெய்வ வழிபாடு? (பகுதி 2)

பாரத தேசம் என்றுமே ஒரு மிகப்பெரிய ஆன்மீக வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹிந்துமதத்தின் ஆசார்யர்களும், பண்டிதர்களும் இந்த உண்மைகளையும், ஆன்மீக கலாசாரத்தையும் மக்களின் வாழ்வியலில் 'உயிர்ப்போடு' வைத்திருந்தனர். வேதாந்தங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை மற்றும் ப்ரம்மஸூத்திரங்களை ஆசார்யர்களும், பண்டிதர்களும் கற்றனர். சாதாரண ஜனங்களுக்கு இவை புரிவது இன்னும் கடினமான பணியே. அதனாலேயே இந்த உபநிஷத சாரங்கள், மற்றும் ப்ரம்ம தத்துவங்கள் எளிய புராணக் கதைகள் மூலமும், வழிபாட்டு முறைகள் மூலமும், உருவங்கள், சின்னங்கள் மூலமாயும் விளக்கப்பெற்றன. வேத மூலமும், அதன் உண்மைகளும் இத்தகைய சாதாரண விளக்கங்கள் மூலமாகவே தலைமுறை, தலைமுறைகளாக பேணி பாதுகாத்து, பரப்பப்பட்டுள்ளன.

புராணங்களில் அநேகக் கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் இவற்றை படிப்போர் "இது என்ன முட்டாள்தனம்?" என்று வியக்கும் அளவிற்கு சில விஷயங்கள் பெரிதுபடுத்திக் (exaggeration) காட்டப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் நமக்கு உணர்த்துவது என்னவெனில், கதைகளை மேலோட்டமாகப் படிக்காமல், அதன் உள் அர்த்ததை உணர முயற்சி செய் என நினைவூட்டுவதற்காகத்தான். பெரும்பாலான மக்களும், அறிவுசாலிகளும் புராணங்களின் இந்த விஷயத்தை புரிந்தேயுள்ளனர். அதனாலேயே இன்றளவும் இப் புராணக் கதைகளும், சடங்கு, சம்பிரதாயங்களும் மக்களால் பரவலாக அங்கீகரிக்கப்படுகின்றன. இங்கே இந்தக் கதைகளின் வரிகளை மேலோட்டமாக படித்துவிட்டு ஆடும் சில ஜன்மங்களும் உண்டு. அவை பண்பட மேலும் சில ஜன்மாக்கள் தேவை என்பதைத் தவிர, வேரெந்த்த முக்கியத்துவமும் கொடுக்கப்படத் தேவையில்லை.

'Religion' எனும் ஆங்கில வார்த்தை, இலத்தீன் மொழியினின்று கொணரப்பெற்றது. 're' என்றால் மீண்டும், 'ligare' என்றால் பிணைக்கப்படுதல், ஒன்றுபடுத்துதல். 'religion' என்றால் 'எது ஒருவனை தன்னுடைய மூலத்திற்கு மீண்டும் பிணைக்கிறதோ அது'. மனிதனுடைய மூலத்தன்மை, அவனேயாவான். மதம் ஒருவனுக்கு தன்னுடைய உண்மையான 'தன்னை' உணர உதவ வேண்டும். ஸனாதன தர்மம் இந்தக் கடமையை விஞ்ஞான பூர்வமாயும், ஒருங்கமைப்போடும் செய்யவல்லது.

ஸனாதன தர்மத்தின் தத்துவங்களும், ஆன்மீக உண்மைகளும் பொது ஜனங்களுக்கு, பல்வேறு உருவங்கள், சின்னங்கள் மூலமாயும் பிரபலபடுத்தப்பட்டுள்ளன. ஒரு உருவத்தின் அடிப்படை 'தெரிந்த அடையாளத்தின் மூலம் தெரியாத உண்மையை உருவகப் படுத்துதல்'. தெய்வ உருவகங்கள் கலையானது, கற்றவர்களிடமும், கல்லாதவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. கல்லாதவர் உருவங்களின் மூலம், சிறிதளவாவது உண்மைகளை உணர முடியும். கற்றரிந்தோர் மேலும் உண்மைகளை உணர உந்தப்படுவர். மற்ற எந்த மதத்தினையும் விட ஹிந்து மதம் இந்த கலையை நன்றாக போதித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்கால சந்ததியினர் இந்த அடையாள, உருவகங்களின் உண்மையான விளக்கங்களை உணர முயற்சிக்காமல், மூட நம்பிக்கை என்று இவற்றை சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் நம் பின்வரும் சந்ததியினர் இவற்றை கண்மூடித் தனமாக ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்வர்.

இன்றைய தேவை, இந்த கலையின் உள் அர்த்தத்தினை புரிந்து மற்றவர்களுக்கும் அதை கற்பித்தலாகும். நம் தெய்வ சிலைகளின் உருவங்களின் தத்துவங்களும், தாத்பரியங்களும் வியக்க வைப்பவை. நம் சம்பிரதாயங்களுக்கும், சடங்குகளுக்கும், பண்டிகைகளுக்கும் பின்னால் இருக்கும் தத்துவங்கள் நம்மால் சிந்திக்க இயலாதவை. இறைவன் அருளால் நான் என் பெரியோர்களிடம் கேட்டறிந்த, படித்தறிந்த சிலவற்றை பின்வரும் பதிவுகளில் எழுதலாமென்றிருக்கிறேன்.