Friday, March 14, 2008

விநாயகர் - முழு முதற் கடவுள்விக்னேஸ்வரர் - விக்னங்களை (தடைகளை) நீக்குபவர் நமது ஹிந்து தேசத்தில் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவர். நம் புராணங்களில் விநாயகர் யானை தலையும், மனித உடலும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு தந்தம் பாதி உடைந்ததாயும், பெரிய வயிற்றை உடையவராயும், ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காலடியில் பலவகையான உணவு வகைகள் பரப்பப்பட்டிருக்கும். ஒரு சுண்டெலி(மூஞ்சூறு) உணவின் இடையில் அவரை வேண்டி அமர்ந்திருக்கும். அவரது உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது.


ஆன்மிக கல்வியின் முதல் படி 'ச்ரவணம்' எனப்பெறும் வேதாந்த உண்மைகளைக் கேட்டல். இரண்டாவது படி, 'மனனம்' எனப்பெறும் கேட்ட வேதாந்த உண்மைகளின் சுய புரிதல்/தெளிதல். விநாயகரின் பெரிய காதுகள் மற்றும் பெரிய தலை அவரது ச்ரவணம் மற்றும் மனனம் குணங்களைக் குறிக்கின்றன.


அவரது முகத்திலிருந்து வெளிப்படும் துதிக்கை அறிவையும், அறிவால் வெளிப்படும் பகுத்தறியும் (திராவிட பகுத்தறிவு அல்ல) திறனையும் குறிக்கும். மனிதனின் அறிவு நமது வேதாந்தங்களின்படி இரு வகைப்படும் - பொது (புற) அறிவு மற்றும் உள் (அக) அறிவு. உலகப் பொருட்களின் எதிர்மறை வித்தியாசத்தை உணர்த்துவது பொது பகுத்தறிவு - எ.கா., இரவு-பகல், கருப்பு-வெள்ளை, சந்தோஷம்-வருத்தம் முதலியவற்றைப் பற்றிய அறிவு. உள் பகுத்தறிவு என்பது நிலையான உண்மை-மாயை, முடிவுள்ளது-முடிவற்றது, புறஉலகம் (terrestrial) (கண்ணுக்குத் தெரிவது) -ஆன்மிகஉலகம் (Transcendental - கண்ணுக்கு தெரியாதது) போன்ற உயரிய சிந்தனைகளப் பற்றிய அறிவாகும். விநாயகரின் துதிக்கை இந்த தத்துவத்தைக் குறிக்கும். யானைகளின் துதிக்கை மற்ற எல்லா உறுப்புகளைவிட சிறப்பானது. துதிக்கையினால் தரையில் இருக்கும் ஒரு குண்டுசியையும் எடுக்கமுடியும், மற்றும் பெரிய மரத்தையும் வேரோடு எடுக்க முடியும். இதைப்போன்ற எதிர் மறை செயல்கள் புரியக்கூடிய ஒரு கருவி இருப்பதரிது. விநாயகர் பெரிய மரம் போன்ற புற உலக அறிவையும், கண்ணுக்குப் புலப்படாத சிறிய ஊசி போன்ற அக அறிவையும் ஒருங்கே உணர்ந்தரிந்தவர் என்பதையே அவரது துதிக்கை குறிக்கிறது.


மனித பூரணத்துவம் உயர்ந்த தத்துவ அறிவைப் பெறுவதனாலேயே சாத்தியம். பூரணத்துவம் பெற்ற மனிதன் உலக எதிர்மறைகளால் பாதிக்கப்படுவதில்லை. சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, குளிர்ச்சி-வெப்பம், மதிப்பு-அவமரியாதை போன்ற புற உலக எதிர்மறைகள் அவனை பாதிப்பதில்லை. சாதாரண மனிதன் உலகத்தின் இத்தகைய எதிர்மறைகளுக்கிடையே அல்லாடிக்கொண்டிருக்கிறான். இந்த விஷயத்தையே விநாயகரின் இரு தந்தங்களும் உருவகப் படுத்துகின்றன. அவற்றில் ஒன்று உடைந்திருப்பது உலக எதிர்மறைகளை உடைத்தெரியத் தயங்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்கே. புற உலகில் தந்தங்கள் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. ஆனால் உண்மையான அறிவு ஏற்பட இந்த உலக பொருட்களைப் பற்றிய பற்றுதலை (அதுவும் நாமே) உடைத்தெறிய வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்கே ஒரு தந்தத்தை தானே உடைத்து கையில் வைத்திருப்பதாக விநாயகர் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்.


விநாயகருடைய பெரிய பானை வயிறு குறிப்பது யாதெனில் பூரணத்துவம் பெற்ற மனிதன் எத்தகைய விஷயத்தையும், அனுபவத்தையும் உட்கொண்டு சீரணித்த பின்னும், நிலையான சிந்தனையுடன் இருக்க முடியும் என்பதையே. எத்தகைய சோதனைகளையும், பிறப்பு-இறப்பு அனுபவங்களையும் ஒருவனால் ஒரே மாதிரி சீரணிக்கமுடியவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உருவகப்படுத்துவது விநாயகரின் பானை வயிறு.


குபேரன் ஒருமுறை ஒரு பிரம்மாண்டமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். விநாயகப் பெருமான், விருந்திற்குப் படைக்கப் பெற்ற அனைத்து உணவுப் பண்டங்களையும் உண்டு விட்டு பசியடங்காமல் தவித்தார். சிவபெருமான் தோன்றி ஒரு கையளவு வருத்த அரிசியை வழங்கினார் - அதனை உண்டவுடன் விநாயகரின் பசியாறியது. இந்தக் கதை விளக்கும் தத்துவம் - மனிதன் குபேர சம்பத்துகளால் ஒருபோதும் திருப்தி அடைய இயலாது. பொருட்களின் பின்னால் உள்ள ஆசை ஒரு போதும் திருப்தியையோ, அமைதியையோ தரவியலாது. உண்மையான தத்துவத்தினை அறிய ஒரே வழி 'வாஸனை' எனப்படு தன் ஆசைகளை ஒருவன் கொன்று தின்பதே. அரிசி வருக்கப்படும் போது தன்னுடைய 'உயிர்த்' தன்மையை இழக்கிறது. அதனால் மறுபடியும் முளைவிட இயலாது. ஆசைகளைக் கொல்வதே வருத்த அரிசியின் உட்கொண்டதன் மூலம் உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. விநாயகரது இடக்கையிலிருக்கும் வருத்த அரிசி உணர்த்தும் தத்துவம் இதுவே.


விநாயகர் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை பூமியில் பதித்தும் அமர்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார். இது ஒரு மனிதன் பூமியிலிருக்கும் போது மற்றெந்த மனிதனைப் போல் வாழ்வதையும், அவனுடைய மனம் மட்டுமே உள் திரும்பி ஆத்மாவில் லயித்திருப்பதையும் காண்பிக்கிறது.


விநாயகரின் காலடியில் பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவு வகைகள் உலக இன்பங்களையும், செல்வத்தினையும் குறிக்கிறது. மேற்கூரிய வகைககளில் வாழும் ஒருவனின் காலடியில் உலக செல்வங்களனைத்தும் குவிந்து கொடுக்கும் என்னும் தத்துவத்தினை உணர்த்துவது இது. அவனுக்கு இச்செல்வங்கள் ஒரு பொருட்டேயில்லையெனினும், அவை அனைத்தும் அவன் காலடியில் அடிமையாகக் கிடக்கும்.


உணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி) ஆசைகளை உருவகப்படுத்துகிறது. எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும் - பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பெற்றுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும், அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது. இத்தகையவனுடைய செயல் பாடுகள், அவனுடைய தெளிந்த சிந்தனையின் பால் நடக்குமே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படமாட்டா.


ஒரு புராணக் கதையின் படி சந்திரன் ஒருமுறை பெருத்த உருவமுடைய விநாயகர், சிறிய மூஞ்சூறுவின் மீது பயணம் செய்ததைப் பார்த்து சிரித்தது. இந்த குற்றத்தினால் விநாயக சதுர்த்தியன்று சந்திரனைப் பார்ப்பது தவறு என்பது ஹிந்து மக்களின் ஒரு நம்பிக்கை. விநாயகர், மூஞ்சுறுவின் மேல் சவாரி செய்வதன் உள் அர்த்தம் யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன்னுடைய உடல், உலக அறிவு, மற்றும் மனதின் மூலம் அறியமுடியா பேருண்மையை உணர்த்த முயற்சிப்பதுவே. உடல், மனம் மற்றும் உலக அறிவு என்பவை முடிவுள்ளவை. இவற்றின் மூலம் 'ஆன்மா' வின் பேருண்மையை விளக்க இயலாது. சந்திரன் மனதின் கடவுள். சாதாரண மனம் கொண்ட மனிதனால் பேருண்மையினை உணர முடிவதில்லை. அந்த அறியாமையினாலேயே அவன் பூரணத்துவம் பெற்றவர்கள், மற்றும் அவர்களது செய்கைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்கிறான். இத்தகைய மகான்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் சந்திரனைப் போலவே நிலையற்ற தன்மை பெற்று வருந்துவார்கள் என்பதனையே விநாயகரின் மூஷிக வாகனப் பயணம் உணர்த்துகிறது.


விநாயகருக்கு நான்கு கரங்கள் உண்டு. இவை மனிதனின் உள் சக்திகளான 'மனஸ்' (மனது), 'புத்தி' (அறிவு), 'அஹங்காரம்' (அகந்தை) மற்றும் 'சித்' (பேரறிவு, மெஞ்ஞான சிந்தனை) என்பனவற்றைக் குறிக்கும். ஒரு கையில் கோடரியும், ஒரு கையில் கயிற்றையும், ஒரு கையில் வருத்த அரிசி உருண்டையையும் (மோதகம்) , நான்காவது கையினில் தாமரைப் பூவையும் கொண்டிருக்கிறார். கோடரி உலகப் பற்றினையும், ஆசைகளையும் அவற்றினால் விளையும் கோப, தாபங்களையும் வெட்டி விட வேண்டும் என்பதனை குறிக்கிறது. கயிறானது உலக பந்தங்களில் இருந்து ஒருவனை விடுவித்து நிலையான உண்மையான தன்னை உணர்தல் எனும் உணர்விற்கு கட்டிப் போடுவதை (பிணைப்பதை) உணர்த்துகிறது. மோதகம் தேடுதலுடைய ஒருவன் அடையப் போகும் நிலையான இன்பத்தைக் குறிக்கிறது. தாமரை பூ மனித பரிணாமவளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளினைக் குறிக்கும்.


ஒவ்வொரு முறை விநாயகப் பெருமானை வணங்கும் போதும், அவரது உருவ அமைப்பு விளக்கும் இத்தகைய உயர்ந்த தத்துவங்களை மனதினிருத்திப் ப்ரார்த்திப்பது நம் அனைவருக்கும் கைவரப்பெற முழுமுதற் கடவுளான விநாயகனைப் வேண்டுகிறேன்.